தமிழக கவர்னரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

காரல் மார்க்ஸ் குறித்த தமிழக கவர்னரின் சர்ச்சை பேச்சுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முத்தரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-02-24 23:42 GMT

சென்னை,

சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, 'காரல் மார்க்சின் சிந்தனைகள் இந்தியாவை சிதைத்தது' என்று தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஆர்.முத்தரசன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித் கவுர், மாநில துணை செயலாளர்கள் நா.பெரியசாமி, மு.வீரபாண்டியன், மாவட்ட செயலாளர்கள் சிவா, கருணாநிதி, வெங்கடேஷ் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி அறியாமையால் இவ்வாறு பேசி வருவதாகவும், எனவே அவரது அறியாமையை அனைவரும் கைத்தட்டி சிரிக்க வேண்டும் என்ற முழக்கம் முன்னெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கைத்தட்டி சிரித்தனர். இதனால் கண்டன ஆர்ப்பாட்டம் கலகலப்பு ஆனது.

வன்முறையை...

ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கும், சட்டமன்றத்துக்கும் எதிராக கவர்னர் செயல்பட்டு வருகிறார். அவரின் வாய்க்கொழுப்பு பேச்சை பல்வேறு அமைப்புகள் கண்டித்து வருகின்றன. ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடித்த பிராணியாக கவர்னர் செயல்படுகிறார். தகாத கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறார். அரசமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மொழிக்கு எதிராகவும், சனாதனம், சாதி ஆகியவற்றை ஆதரித்தும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருகிறார்.

2 ஆயிரம் ஆண்டுகளில் உலகின் மிகச்சிறந்த அறிஞராக, மாமேதை காரல் மார்க்சை பி.பி.சி. நிறுவனம் அறிவித்தது. அத்தகைய காரல் மார்க்ஸ் குறித்து அப்பட்டமாக அவதூறு பரப்புகிறார் கவர்னர்.

கருப்பு கொடி போராட்டம்

இந்தியாவில், சாதி, மதம் சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை ஆய்வு செய்து மார்க்ஸ் அறிவித்தார். அவர் கூறியதற்கு நேர்மாறாக, காரல் மார்க்சால்தான் இந்தியாவில் சாதி, மதம், வறுமை இருக்கிறது. எனவே மார்க்ஸ் நிராகரிக்கப்பட்டார் என்று, நிராகரிக்கப்பட்ட கவர்னர் கூறுகிறார்.

கவர்னரின் இந்த பேச்சை கண்டித்து தற்போது ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மேலும் கவர்னருக்கு எதிராக வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மார்க்ஸ் குறித்து தான் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டும். தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டில் அவர் எங்கும் நடமாட முடியாது. அவர், செல்லும் இடமெல்லாம் அவருக்கு எதிராக கருப்பு கொடி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அதனால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு கவர்னர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்