குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்ட வேண்டும் என கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் குடியாத்தம் நகர, ஒன்றிய 23-வது மாநாடு நடைபெற்றது. கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணி கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமார், சித்ரா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநாட்டை கட்சியின் மாநில துணைச் செயலாளர் மூ.வீரபாண்டியன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளர் துரை செல்வம் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆர்.முல்லை, முன்னாள் எம்.எல்.ஏ. ஜி.லதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் புதிய செயலாளராக டி.ஆனந்தன், துணை செயலாளர்களாக கே.சி.பிரேம் குமார், ஜி.தங்கவேலு, பொருளாளராக எஸ்.மகேஷ் பாபு மற்றும் 17 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தரைப் பாலத்தை போர்க்கால அடிப்படையில் மேம்பாலமாக கட்ட வேண்டும். நீர்நிலை பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் தரவேண்டும். அதுவரை மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும். மோர்தானா அணையில் சுற்றுலா தலம் அமைக்க வேண்டும்.
குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறவழிச்சாலை அமைக்க வேண்டும். மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் நிர்வாகி தங்கவேலு நன்றி கூறினார்.