எடை குறைவாக உள்ளதாக கூறி ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து இறக்க விடாமல் தொழிலாளர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதம் கம்மாபுரம் அருகே பரபரப்பு

கம்மாபுரம் அருகே எடை குறைவாக உள்ளதாக கூறி ரேஷன் அரிசி மூட்டைகளை லாரியில் இருந்து இறக்க விடாமல் தொழிலாளர்களுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-09 20:21 GMT

கம்மாபுரம், 

கம்மாபுரம் அருகே புதுவிருத்தகிரிகுப்பத்தில் பகுதிநேர ரேஷன் கடை இயங்கி வருகிறது. பொது வினியோக திட்டத்தின் கீழ் இந்த கடைக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகள் அனைத்தும் 50 கிலோ எடைக்கு பதிலாக 45 கிலோ அரிசி மட்டும் கடந்த சில மாதங்களாக அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடையின் விற்பனையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், கண்டுகொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து 50 கிலோ அரிசி மூட்டைக்கு பதிலாக 45 கிலோ அரிசி மூட்டை மட்டுமே அனுப்பியதால், பொதுமக்களுக்கும் சரிவர அரிசி வினியோகம் செய்ய முடியவில்லை.

தொழிலாளர்களுடன் வாக்குவாதம்

இதற்கிடையே ரேஷன் கடைக்கு நேற்று அரிசி வாங்க வந்த மக்களிடம், எடை குறைவான அரிசி மூட்டைகள் குடோனில் இருந்து வருவதால் தங்களுக்கு சரியான அளவு அரிசி கொடுக்க முடியவில்லை என விற்பனையாளர் கூறினார். அந்த சமயத்தில் ரேஷன் அரிசி மூட்டைகளை இறக்குவதற்காக ரேஷன் கடைக்கு லாரி வந்தது. இதை பார்த்த கிராம மக்கள், லாரியில் இருந்து மூட்டைகளை இறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அரிசி மூட்டைகள் 50 கிலோ எடை இருந்தால் மட்டுமே இறக்க வேண்டும் என்று கூறி, லாரியில் வந்த தொழிலாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

உடனே தொழிலாளர்கள், அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். பின்னர் இனிமேல் மூட்டையின் எடை குறையாமல், சரியாக எடையில் அரிசி மூட்டைகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள், இனி எடை குறைவான அரிசி மூட்டைகளை ரேஷன் கடைக்கு கொண்டு வந்தால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்