தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலையால் பரபரப்பு
தனது சாவுக்கு மாமனார்-மாமியார் காரணம் என ‘வாட்ஸ்-அப் ஸ்டேடஸ்’ வைத்துவிட்டு, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சாத்தூர்,
தனது சாவுக்கு மாமனார்-மாமியார் காரணம் என 'வாட்ஸ்-அப் ஸ்டேடஸ்' வைத்துவிட்டு, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
4 மாத கர்ப்பிணி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்தண்டுகாளை (வயது 32). தொழிலாளி. இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்ற நிலையில் இவர் சதானந்தபுரத்தை சேர்ந்த வர்ஷினி (22) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவா்களுக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் வர்ஷினி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
உத்தண்டுகாளையின் தந்தை கருப்பசாமி, தாய் சோலையம்மாள். இவர்கள் இருவரும் வர்ஷினியை அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையில் இருந்து வந்த வர்ஷினி 'வாட்ஸ் அப் ஸ்டேடசில்' தனது மரணத்திற்கு மாமனார், மாமியார்தான் காரணம் என வைத்துவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
மனைவியின் வாட்ஸ்அப் ஸ்டேடஸை போனில் பார்த்த உத்தண்டுகாளை விரைந்து வந்து வீட்டின் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டது தெரியவந்தது. அப்போது குழந்தை வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்ததாக கூறப் படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த அப்பையநாயக்கன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வர்ஷினியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வர்ஷினியின் தாயார் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அப்பையநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதவி கலெக்டரும் மேல்விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.