விநாயகர் சிலை கரைப்பு குறித்து கண்காணிக்க குழு அமைப்பு - தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
ஆறுகள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தி உள்ளது.;
சென்னை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த வழிமுறைகளை பின்பற்றி சிலைகளை கரைப்பதற்கு செயற்கையான நீர்நிலைகளை உருவாக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் செயற்கை நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் ஏற்படக்கூடிய கழிவுகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் சுத்தம் செய்ய வேண்டி இருப்பதாகவும், சிலைகளை கரைப்பது தொடர்பான முறையான வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட தீர்ப்பாயம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி தான் சிலைகள் கரைக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை செயலாளர் தலைமையில், பொதுத்துறை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
மேலும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள், ஆறுகள், முகத்துவாரங்கள், ஏரிகள் போன்றவற்றில் சிலைகள் கரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.