4-வது திட்டத்தில் தை மாதம் 1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகம்

4-வது திட்டத்தில் தை மாதம் 1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகம்

Update: 2022-11-01 13:01 GMT

திருப்பூர்

திருப்பூர் மாநகரில் 4-வது குடிநீர் திட்டத்தில் வருகிற தை மாதம் 1-ந் தேதி முதல் குடிநீர் வினியோகம் தொடங்கும் என்று செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

அமைச்சர் பங்கேற்பு

திருப்பூர் மாநகராட்சி 49-வது வார்டு ராக்கியாபாளையம் ஆர்.வி.இ.நகரில் உள்ளாட்சி தின விழாவை முன்னிட்டு வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார். திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

நமக்கு நாமே திட்டம் பொதுமக்களின் பங்களிப்பும், ஈடுபாடும் இருக்கும்போது அந்த திட்டம் வெற்றி பெறும். அனைத்து திட்டப்பணிகளிலும் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்கள் நிதி பங்களிப்புடனும், 2 பங்கு அரசு நிதியின் மூலம் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுடன் மக்களும் இணைந்து பணியாற்றும்போது நிச்சயமாக எந்த திட்டமாக இருந்தாலும் நிறைவேற்ற முடியும். இந்த திட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி மதிப்பில் 129 சாலைப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் 1,036 பணிகள் மாநகராட்சியில் அரசு பொறுப்பேற்ற பிறகு நடந்து முடிந்துள்ளது. தேவைப்படும் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் என குறிப்பிட்டு ரூ.400 கோடிக்கு நிதி கோரி மாநகராட்சியின் மூலமாக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

4-வது குடிநீர் திட்டம்

பொதுமக்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாக அரசுக்கு குறைபாடுகளை தெரிவித்து அவற்றை தீர்க்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மாநகராட்சியில் ஒருகுரல் புரட்சி திட்டம் பொதுமக்களின் குறைகளை அதற்குண்டான கட்டணமில்லா தொலைபேசி எண் 155304 மூலமாக தெரிவித்தால் குறைகள் விரைவாக தீர்க்கப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து 4-வது குடிநீர் திட்டம் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது. முதல்-அமைச்சர் உத்தரவுப்படி, வருகிற தை மாதம் 1-ந் தேதி குடிநீர் வினியோகம் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 179 திட்டப்பணிகள் ரூ.30 ½ கோடியில் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா, உதவி ஆணையாளர் வாசுகுமார், மாநகர் நல அதிகாரி கவுரி கிருஷ்ணன், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், பகுதி செயலாளர் ராமதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

--------

குறிப்பு படம் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்