பதவி உயர்வு வழங்கக்கோரிவணிகவரி பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்அனைத்து பணிகளும் பாதிப்பு

அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்கக்கோரி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வணிகவரி பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டன.

Update: 2023-03-15 18:45 GMT

தற்செயல் விடுப்பு போராட்டம்

1,000 துணை மாநில வரிஅலுவலர் கோப்பினை தனியே பிரித்து பதவி உயர்வு ஆணையை உடனே வழங்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும், விஞ்ஞான பூர்வமற்ற வருவாய் குறியீட்டை நீக்க வேண்டும், பழிவாங்கும் கோட்ட மாறுதல்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு உதவி ஆணையர், வணிகவரி அலுவலர், துணை வணிகவரி அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகவரி பணியாளர் சங்கம் ஆகியவை சார்பில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் விழுப்புரம் வணிகவரி உதவி ஆணையர் அலுவலகங்கள் 1, 2 மற்றும் திண்டிவனம், செஞ்சி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர்கள் முதல் உதவி ஆணையர் வரையிலான அலுவலர்கள் வரை 150-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணிக்கு செல்லாமல் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த அலுவலகங்களில் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

பணிகள் பாதிப்பு

இவர்களின் இந்த போராட்டம் காரணமாக மேற்கண்ட வணிகவரி அலுவலகங்களில் பதிவுச்சான்று வழங்குதல், வரிவிதிப்பு மேற்கொள்ளும் பணி, வரிவசூல் பணி, தணிக்கை பணி, பறக்கும்படை சோதனை உள்ளிட்ட அனைத்து பணிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்