வணிக சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.25 உயர்த்தின. சென்னையில் ரூ.1,971-க்கு வணிக சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை.

Update: 2023-01-01 23:48 GMT

சென்னை,

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதத்தின் முதல் தேதி அல்லது மாதத்தில் இரண்டு முறை என்ற அடிப்படையில் நிர்ணயித்து வருகின்றன.

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியதை அடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து, கடந்த 4 முதல் 5 மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இருந்தாலும், சமையல் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டரின் விலை அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.25 விலை உயர்வு

இந்தநிலையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தின.

அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதன் விலை ரூ.1,971 ஆக உயர்ந்துள்ளது.

இதனால், ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம், வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.1,068.50க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்