மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம் - பொதுமக்களுக்கு உயர்மட்ட குழு வேண்டுகோள்

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்கள் கல்வியாளர்களிடம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்மட்ட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-07-15 23:51 GMT

சென்னை,

தமிழக அரசின் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, மாநில கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு அமைத்தது.

அந்த குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படும் என்று குழு தலைவர் முருகேசன் தெரிவித்துள்ளார். இதன்படி மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்கள் கல்வியாளர்களிடம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என உயர்மட்ட குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் இருந்து கருத்துக்கள், ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, அல்லது அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 'செண்டர் ஃபார் எக்சலன்ஸ்' கட்டிடத்தின் 3-வது தளத்தில் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்