செப்டம்பர் மாதம் முதல்சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு விமான சேவை தொடக்கம்எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தகவல்

Update: 2023-07-30 20:06 GMT

ஓமலூர்

செப்டம்பர் மாதம் முதல் சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்படுகிறது என்று எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. தெரிவித்தார்.

விமான சேவை நிறுத்தம்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் பகுதியில் சேலம் விமான நிலையத்தில் 2 விமானங்கள் நிறுத்த வசதி உள்ளது. இங்கு மேலும் 2 விமானங்கள் நிறுத்தும் வகையில் ரூ.6½ கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம் விமான நிலையத்தில் ட்ரூஜெட் விமான சேவையானது கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டது. இதனால் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் பகுதிகளை சேர்ந்த கல்வி நிறுவன அதிபர்கள், தொழில் அதிபர்கள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

அரசிடம் கோரிக்கை

இந்த நிலையில் மத்திய விமானத்துறை மந்திரி வலியுறுத்தலின்பேரில் உதான் திட்டத்தில் அலையன்ஸ் ஏர் விமானம் சார்பில் பெங்களூரு- சேலம்- கொச்சின்- சேலம்- பெங்களூரு வாரத்தில் 7 நாட்களிலும், இண்டிகோ ஏர்லைன்ஸ் சார்பில் பெங்களூரு- சேலம்- ஐதராபாத்- சேலம்- பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு வாரத்தில் 4 நாட்களில் விமான சேவையை தொடங்க உள்ளது.

அதேபோல் சென்னை- சேலத்துக்கு விமான சேவையை தொடங்க இந்தியா ஏர்லைன்ஸ் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கப்படும். தேதியை அவர்கள் தான் முடிவு செய்து அறிவிப்பார்கள்.

23 சிறிய விமான நிலையங்கள்

விமான நிலைய விரிவாக்கம் செய்ய விவசாயிகள் நிலம் கொடுக்க முன்வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். விரைவில் சேலம்- சென்னை விமான சேவையை தொடங்குவது குறித்து பேச மத்திய விமானத்துறை மந்திரியை நேரில் சந்திக்க உள்ளோம். 23 புதிய சிறிய விமான நிலையங்களை உதான் திட்டத்தில் சேர்த்துள்ளனர்.

சேலம் விமான நிலையமானது உதான் திட்டத்தில் 23-வது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் அலைன்ஸ் ஏர், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவையை தொடங்க உள்ளது. 72 சீட்டுகள் கொண்ட விமானத்தில் 36 சீட்டுகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. வருங்காலத்தில் சேலத்தில் இருந்து திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் விமான நிலைய இயக்குனர் ரமேஷ், தி.மு.க. நிர்வாகிகள் ராஜா, உலகு, குட்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்