கன்னியாகுமரிக்கு வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாளை மறுநாள் புறப்பாடு
கன்னியாகுமரிக்கு வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாளை மறுநாள் புறப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரிக்கு வரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாளை மறுநாள் புறப்படுகிறது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது.
செஸ் விளையாட்டில் ஒலிம்பிக்காக கருதப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா, நார்வே உள்பட 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
ஜோதி புறப்பாடு
இதற்கான ஜோதி மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வருகிறது. பின்னர் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறது. இந்த நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
44-வது செஸ் ஒலிம்பியாட் உலக போட்டியானது மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 26-ந் தேதி (நாளை மறுநாள்) அதிகாலை கன்னியாகுமரி காந்தி மண்டபம் வந்தடைகிறது. அங்கிருந்து காலை 6.30 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. பின்னர் 7 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து அமைச்சர்கள் ஒலிம்பியாட் ஜோதியை கிராண்ட் மாஸ்டர் நிலோபர் தாசிடம் வழங்குகிறார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
அதைத்தொடர்ந்து ஒலிம்பியாட் ஜோதி திருவள்ளுவர் சிலைக்கு கொண்டு சென்று சிலையை சுற்றி வலம் வரவுள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், விளையாட்டுத்துறை, சுற்றுலாத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம், பள்ளி கல்வித்துறை, தீயணைப்புத்துறை, நேரு யுவகேந்திரா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பேரூராட்சிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
வருவாய் அதிகாரி
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டேவிட் டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.