பிளஸ்-2 மாணவர் குடும்பத்திற்கு மதியழகன் எம்.எல்.ஏ. ஆறுதல்
பர்கூர் அருகே பலியான பிளஸ்-2 மாணவர் குடும்பத்திற்கு மதியழகன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
பர்கூர்:
பர்கூர் அருகே சக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 17). கப்பல்வாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளியில் சக மாணவர் தாக்கியதில், வலிப்பு ஏற்பட்டு மாணவர் கோபிநாத் உயிரிழந்தார். அவரது உடல் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே மாணவரின் உடலுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் மாணவர் கோபிநாத்தின் குடும்பத்திற்கு வழங்கினார்.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், துணை செயலாளர் கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் வி.ஜி.ராஜேந்திரன், அறிஞர், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், கவுன்சிலர் பாலாஜி மற்றும் பலர் உடன் இருந்தனர்.