பட்டாசு வெடி விபத்தில்காயம் அடைந்தவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் நேரில் ஆறுதல்

Update: 2023-07-29 19:45 GMT

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பட்டாசு வெடி விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், அசோக்குமார் ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினார்கள்.

 ஆறுதல்

கிருஷ்ணகிரியில் பழையபேட்டையில் பட்டாசு குடோனில் நடந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். வெடி விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் இறந்தவர்களின் 7 பேரின் வீடுகளுக்கு அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் சென்று அவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை அவர்களின் வாரிசுதாரர்களிடம் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். அப்போது கலெக்டர் சரயு, வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், எம்.எல்.ஏ.க்கள் மதியழகன், பிரகாஷ், உதவி கலெக்டர் பாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எம்.எல்.ஏ.க்கள்

இந்தநிலையில் வெடி விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க, டாக்டர்களை கேட்டுக் கொண்டார். மேலும் விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய மதியழகன் எம்.எல்.ஏ., அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். அப்போது தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

அதே போல கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக வெடி விபத்து நடந்த இடத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

தம்பிதுரை எம்.பி.

பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருபவர்களை தம்பிதுரை எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள பகுதியில் பட்டாசு குடோனுக்கு எவ்வாறு அனுமதி கொடுத்தார்கள். இந்த விபத்துக்கு காரணமான அனைவரும் தண்டிக்க வேண்டும். சாதாரண பட்டாசுகள் வெடித்து இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இங்கு என்ன நடந்தது என்பதையும் விசாரிக்க வேண்டும். இது போன்ற தொடர் சம்பவங்கள் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு உதாரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்