வந்தே பாரத் ரெயிலால் வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும் பிளாட்பாரம் மாற்றத்தால் பயணிகள் கடும் அவதி

நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் பிளாட்பாரம் மாற்றப்ப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-10-24 21:24 GMT

வைகை எக்ஸ்பிரஸ்

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் பல்வேறு ரெயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதில் மதுரையின் அடையாளமாக உள்ள மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனை தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படும் நேரத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த ரெயில் மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 6.40 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதுரை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 9.15 மணிக்கு பதிலாக இரவு 9.30 மணிக்கு மதுரை வந்தடைகிறது. மதுரை-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (வ.எண்.16722) மதுரையிலிருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.00 மணிக்கு புறப்படுகிறது. மதுரை-சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12638) மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 9.20 மணிக்கு புறப்படுகிறது.

மதுரை-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16868) மதுரையிலிருந்து அதிகாலை 4.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக அதிகாலை 3.35 மணிக்கு புறப்படுகிறது. இதற்கிடையே, மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக மதுரை ரெயில் நிலையத்தின் 3-வது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2 வாரங்களாக இந்த ரெயில் மேற்குநுழைவுவாயில் அருகில் உள்ள 7-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ரெயில் புறப்படுவதற்கு 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன்னதாக பிளாட்பார மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

உணவுப்பெட்டி

இதனால் பயணிகள், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை தவறவிடுவது வாடிக்கையாகி விட்டது. ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனையில் இருந்து காலதாமதம் காரணமாக நேரடியாக அருகில் உள்ள 7-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குறிப்பாக பிளாட்பார மேற்கூரை கூட கிடையாது. பயணிகள் அதிகம் எதிர்பார்க்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் தேநீர் கிடைப்பதில்லை.

இதுகுறித்து பயணிகளின் தரப்பில் கடந்த ஒரு வார காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் ரெயில் மதாத் என்று சொல்லப்படும் குறைதீர்ப்பு செயலியில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7-வது பிளாட்பாரம்

அதேபோல, மதுரையில் இருந்து புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஞ்சாப் மாநிலம் சண்டிகருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7-வது பிளாட்பாரத்தில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. பிளாட்பாரத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாததால் பயணிகள் நள்ளிரவு நேரத்தில் தங்களது செல்போன் டார்ச் மூலம் தங்களுக்கான பெட்டிகளை தேடிச்சென்று ஏறியுள்ளனர்.

7-வது பிளாட்பாரத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பின்னர் வைகை உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை அங்கிருந்து இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரெயிலுக்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை நெருக்கடிக்கு ஆளாக்க கூடாது என்றும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே, தென்னக ரெயில்வேயில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலால், சொரனூர்-கண்ணூர் இடையே ரெயில்களின் இயக்கத்தில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து ரெயில் பயணிகள் மனித உரிமை ஆணையத்தில் அளித்த புகாரின்பேரில், பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் பதிலளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளக்கம்

இதுகுறித்து முதுநிலை வர்த்தக மேலாளர் கணேஷ் கூறும்போது, மதுரை கோட்ட மேலாளர் உத்தரவுபடி, பயணிகளுக்கு தேவையான குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் 7-வது பிளாட்பாரத்தில் செய்யப்பட்டு வருகிறது. இதில் போதிய விளக்கு வசதிகளும் செய்யப்பட உள்ளன என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்