மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தாா்.;
கல்லக்குடி:
திருச்சி மாவட்டம், கல்லக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட புதூர்பாளையம் ஊராட்சி வாணதிரையான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது 45). இவர் வாணதிரையான் பாளையத்தில் உள்ள அரசு விவசாய பண்ணையில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய பண்ணையில் வேலை செய்து வரும் சிலருக்கு உணவு வாங்குவதற்காக வாணதிரையான்பாளையத்தில் இருந்து விரகாலூர் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
புள்ளம்பாடி-திருமழபாடி சாலையில் தனவளநல்லூர் அருகே சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை, அதனை ஓட்டிச்சென்றவர் திடீரென நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த மோட்டார் சைக்கிள் மீது தர்மராஜின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த தர்மராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விரகாலூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசுவின் மகன் வினோத்துக்கு(32) காலில் பலத்த காயம் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் தர்மராஜின் தந்தை முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தர்மராஜின் உடலை கைப்பற்றி லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.