கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

ஆலங்குளத்தில் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-08 19:39 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 3 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த மே 13-ந்தேதி இந்த கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3-வது கல்வி ஆண்டாக மாணவிகள் சேர்க்கை நடைபெற்ற நிலையில், மாணவிகளின் எண்ணிக்கை 800-க்கும் அதிகமாகி உள்ளது. மாணவிகள் அனைவருக்கும் தற்போது செயல்பட்டு வரும் வாடகை கட்டிடம் போதுமானதாக இல்லை என்பதால் மாற்று ஏற்பாடாக சுமார் 250 மாணவிகள் ஆலங்குளத்திலும், மற்ற மாணவிகள் நெல்லை ராணி அண்ணா மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத்திலும் கல்வி பயில கடந்த 5-ந்தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவிகள் அனைவரும் ஆலங்குளத்திலேயே தொடர்ந்து கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், போலீசார் ஆலங்குளத்திலேயே கல்லூரி தொடர்ந்து இயங்கும் என்று கூறினர்.

ஆனாலும் அவர்களை தொடர்ந்து நெல்லைக்கு சென்றுவர வேண்டும் என்று கூறியதாகவும், அவ்வாறு நெல்லை செல்லாத மாணவிகளுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் 2-வது நாளாக நேற்று முன்தினம் மாணவிகள் தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு அளித்தனர். அதன்பிறகும் தீர்வு கிடைக்காததால் நேற்று 3-வது நாளாக மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது நிர்வாகம் தரப்பில், ஒரு வார காலத்துக்குள் ஆலங்குளத்திலேயே வகுப்புகள தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்