காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் 3 பேர் மீது வழக்கு

வடசேரி பஸ் நிலையத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-05 20:21 GMT

வநாகர்கோவில், 

வடசேரி பஸ் நிலையத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவர்கள் மோதல்

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தின் வெளியே சம்பவத்தன்று ஒரு கல்லூரி மாணவர் தனியாக நின்று கொண்டிருந்தார். அப்போது சில மாணவர்கள் அங்கு வந்து தனியாக நின்ற மாணவரிடம் தகராறு செய்தனர். ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில் அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் தனியாக நின்ற மாணவர் சரமாரியாக தாக்கப்பட்டார்.

இதைபார்த்த பயணிகள் அங்கு கூடினர். உடனே, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். காயமடைந்த மாணவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மாணவர் தரப்பில் வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரத்தில் இந்த மோதல் நடந்தது தெரிய வந்தது.

அதன் விவரம் வருமாறு:-

மாணவியுடன் காதல்

அழகியபாண்டியபுரம் அந்தரபுரம் பகுதியை சோ்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் நாகர்கோவிலில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவரை பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாணவியின் சகோதரர் நாகர்கோவிலில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு தங்கையின் காதல் விவகாரம் தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் வைத்து அந்த பிளஸ்-2 மாணவனை மாணவியின் சகோதரர் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறின்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் பயின்று வரும் அருமநல்லூர் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதனால் நர்சிங் கல்லூரி மாணவர் மீது மாணவியின் சகோதரரும் அவரது நண்பர்களும் ஆத்திரமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அடிக்கடி பல்வேறு இடங்களில் மோதிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

3 மாணவர்கள் மீது வழக்கு

இந்த நிலையில் சம்பவத்தன்று வடசேரி பஸ் நிலையம் வெளியே நர்சிங் கல்லூரி மாணவர் நின்று கொண்டிருந்த போது மாணவியின் சகோதரர் மற்றும் அவரது நண்பா்கள் அங்கு வந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த மோதலில் ஈடுபட்ட அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.

மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் ெதரிய வந்தது. இதையடுத்து மாணவியின் சகோதரர் மற்றும் நண்பர்கள் என 3 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்