முல்லைப்பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்
முல்லைப்பெரியாற்றில் நண்பர்களுடன் குளித்தபோது கல்லூரி மாணவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.;
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 19). இவர், வீரபாண்டி கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர், நண்பர்கள் சிலருடன் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார். பின்னர் அவர் நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி ஆனந்தமாய் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் ஆழமான பகுதியில் நின்று குளித்ததாக தெரிகிறது.
இதனால் திடீரென தண்ணீரில் மூழ்கிய தங்கப்பாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதைக்கண்டதும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அவர்கள் வீரபாண்டி போலீசார், தேனி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணி ஆனதால் மாணவரை தேடும் பணி நிறுத்தப்பட்டது. 2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) தேடும் பணி நடைபெறும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.