செல்போனில் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்த மாணவரால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி
குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை செல்போனில் ஆபாசமாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை செல்போனில் ஆபாசமாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கேலி-கிண்டல்
பொன்மனை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் குலசேகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார். அப்போது அதே பள்ளியில் மாத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் பிளஸ்-1 படித்து வந்தார்.
அப்போது மாணவியை, அந்த மாணவர் கேலி-கிண்டல் செய்து வந்தார். இதுபற்றி மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து மாணவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்கொலை முயற்சி
அதன்பிறகு மாணவி குழித்துறை பகுதியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ஆனாலும் அந்த மாணவர் விடாமல் கடந்த ஒரு ஆண்டாக செல்போன் மூலம் மாணவி மற்றும் அவருடைய தாயாரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அதிக அளவில் தின்று மயங்கி விழுந்தார். உடனே அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணை
இது குறித்து மாணவியின் தந்தை குலசேகரம் போலீஸ் நிலையத்தில புகார் செய்தார். அதன்பேரில், செல்போனில் ஆபாசமாக பேசி மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணமான வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.