சங்ககிரியில் பரிதாபம்: விஷ மாத்திரை தின்று கல்லூரி மாணவி தற்கொலை-தங்க மோதிரம் தொலைந்ததை பெற்றோர் திட்டியதால் விபரீதம்

சங்ககிரியில் விஷ மாத்திரை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். தங்க மோதிரம் தொலைந்ததை பெற்றோர் திட்டியதால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

Update: 2023-01-27 21:13 GMT

சங்ககிரி:

கல்லூரி மாணவி

சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என்.பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 53). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் பாரதி (21). திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாரதி பிறந்த நாளையொட்டி அவருடைய பெற்றோர் தரப்பில் தங்கமோதிரம் பரிசாக வழங்கினர்.

அந்த மோதிரத்தை பாரதி தொலைத்து விட்டதாக தெரிகிறது. இதனை பெற்றோரிடம் பாரதி கூறியுள்ளார். அவருடைய தாய், பாரதியை திட்டியதாக கூறப்படுகிறது.

தற்கொலை

நேற்று முன்தினம் கல்லூரி விடுமுறை என்பதால் பாரதி யாரிடமும் பேசாமல் வீட்டில் இருந்ததாக தெரிகிறது. இரவு 8 மணி அளவில் ஆறுமகம், தன்னுடைய இரும்பு வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது பாரதி வாந்தி எடுத்துள்ளார். அவரிடம் விசாரித்த போது விஷ மாத்திரை தின்றதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம், பாரதியை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பாரதி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பாரதி தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்