கல்லூரி மாணவர் தற்கொலை
களக்காடு அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 50). இவர் மும்பையில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் அஜய் (17). சேரன்மாதேவியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் அவர் கல்லூரிக்கு செல்லாமல் அடிக்கடி விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனை தாயார் பூங்கோதை கண்டித்துள்ளார். இதனால் அஜய் மனம் உடைந்து காணப்பட்டார். இதற்கிடையே நேற்று அவர் வீட்டு மாடிக்கு சென்று உள்புறமாக கதவை பூட்டிக் கொண்டார். நீண்டநேரமாக அவர் வெளியே வராததால், அவரது சகோதரர் விஜய் சென்று பார்த்த போது, அஜய் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து சடலமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.