கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-05-02 18:45 GMT

பொள்ளாச்சி, 

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கவுரி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கீர்த்திவாசன், இன்ஸ்பெக்டர் மணிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டது கோவை இடையர்பாளையத்தை சேர்ந்த ராஜன் என்பவரது மகள் சுப்புலட்சுமி (வயது 20) என்பதும், கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் 3-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சுப்புலட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வாலிபர் ஒருவர் மாணவியை கொலை செய்து விட்டு தப்பி சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கொலை நடந்த வீட்டில் சுஜய் (27) வசித்து வந்ததும், அவர் மாணவியை கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுஜய். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனியாக சந்தித்து பேசி வந்து உள்ளனர். இதற்கிடையில் சுஜய்க்கும், பாலக்காட்டை சேர்ந்த ரேஷ்மா (25) என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதால், வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று உள்ளார்.

தகராறு

இந்தநிலையில் மாணவியை சுஜய் காதலித்து விட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இருக்கலாம். இதனால் அந்த மாணவி பொள்ளாச்சியில் சுஜய் தங்கி இருந்த வீட்டிற்கு பேக்குடன் வந்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுப்புலட்சுமியின் வயிற்றில் 9 இடங்களில் கத்தியால் குத்தியது தெரியவந்து உள்ளது. மேலும் தப்பி ஓடிய சுஜயை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்