பிளிப்கார்ட் பெயரை சொல்லி கல்லூரி மாணவரிடம் நூதன மோசடி

பிளிப்கார்ட்டில் பரிசு விழுந்துள்ளதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.1 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2024-07-09 03:21 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 20). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய செல்போனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்புகொண்டு பேசிய நபர், பிளிப்கார்ட் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற நீங்கள் தேர்வாகியுள்ளதாகவும், அதற்காக ஆதார் அடையாள அட்டை விவரத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதை உண்மையென நம்பிய சந்துரு, தன்னுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை அந்த நபரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அந்த நபர், சந்துருவை மீண்டும் தொடர்புகொண்டு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை பெற நகர்வு கட்டணம், டெலிவரி கட்டணம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றுக்காக பணம் கட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளார் 

அதன்படி சந்துரு, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் அந்த நபர் அனுப்பச்சொன்ன கூகுள்பே எண்களுக்கு 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 800-ஐ அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்ற அந்த மர்ம நபர், சந்துருக்கு பரிசுத்தொகை ஏதும் அனுப்பாமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து அவர், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்