கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்

Update: 2022-09-14 14:26 GMT

பொள்ளாச்சி

சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி

பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்னை ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:- எனக்கு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தேன். அப்போது முகநூலில் டி.என்- 41 என்கிற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதை பார்த்தேன். இதையடுத்து அதில் இருந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசினேன்.

அப்போது பேசிய நபர் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள விடுதியில் நடிகைகள் தேர்வு நடப்பதாக கூறினார். இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் பொள்ளாச்சிக்கு சென்றேன். அங்கு விடுதியில் இருந்த கரூரை சேர்ந்த பார்த்தீபன் (வயது30) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். மேலும் ஒரு அமைப்பின் மாநில செயலாளராக இருந்தார். ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து பார்த்தீபன் நடிகையை தேர்வு செய்தார். என்னை அழைத்த போது உள்ளே சென்ற எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன்.

பாலியல் பலாத்காரம்

சுய நினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்து இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு தற்போது உனக்கு 17 வயது தான் ஆகிறது. 18 வயதானதும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். மேலும் அவர் என்னை படத்தின் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதேபோன்று பலமுறை ஆசை வார்த்தை கூறி என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். இதுகுறித்து அவரிடம் கூறி, உடனடியாக என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினேன்.

அதற்கு அவர் நீ குழந்தை பெற்றால் கதாநாயகியாக நடிக்க முடியாது என்று கூறி சில மாத்திரைகளை வாங்கி கொடுத்து எனது கர்ப்பத்தை கலைத்தார். மேலும் அவர் என்னை கதாநாயகியாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பார்த்தீபன் ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

போக்சோ வழக்கு

இந்த புகாரின் மகளிர் போலீசார் 17 வயது சிறுமி என்று தெரிந்தும், சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததாக பார்த்தீபன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஆன்லைன் மூலம் தன்னை பதிவு திருமணம் செய்ததாகவும், பின்னர் தன்னை விட்டு பார்த்தீபன் பிரிந்து சென்றது தெரியவந்தது. அப்போது அந்த மாணவி பார்த்தீபனின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது தான் கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்தது தெரியவந்தது. நான் அவன் இல்லை பட பாணியில் பார்த்தீபன் பெண்களை திருமணம் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அவரை பிடித்து விசாரித்தால் தான் இதுபோன்று பாதிக்கப்பட்ட பெண்களின் விவரம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்