சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவன் பலி
சிவகாசியில் சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவன் பலியானார்.
சிவகாசி,
சிவகாசியில் சரக்கு வாகனம் மோதி கல்லூரி மாணவன் பலியானார்.
கல்லூரி மாணவர்கள்
சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் துரை. இவரது மகன் சுஜை (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற சுஜை மாலையில் கல்லூரி முடிந்த பின்னர் தன்னுடன் படித்து வரும் நண்பர் ரிஷி என்கிற விக்னேஷ் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
அப்போது தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளை சுஜை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே வரும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாணவன் சுஜை ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
ஒருவர் சாவு
இதில் நிலைதடுமாறி ரோட்டில் விழுந்த சுஜைக்கு ஹெல்மெட் அணிந்த நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
உடன் வந்த ரிஷி என்கிற விக்னேஷ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த சுஜையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி டவுன் போலீசார் சரக்கு வாகன டிரைவர் ராமச்சந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவன் சாலை விபத்தில் இறந்ததை அறிந்த அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதனர்.