ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பலி
அம்மையநாயக்கனூர் அருகே ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
அம்மையநாயக்கனூர் அருகே, ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக கொடைரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரெயிலில் அடிப்பட்டு இறந்தவர் அம்மையநாயக்கனூரை சேர்ந்த செல்வக்குமார் மகன் ஜெயராம் (வயது 22) என்று தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற ஜெயராம் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் தான் அவர், மதுரை-சென்னை சென்ற ஒரு ரெயிலில் அடிபட்டு ஜெயராம் இறந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கொடைரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்மோதி பலியான ஜெயராம், மதுரையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.