மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவி பலி
வடமதுரை அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவி பலியானார்.
வடமதுரை அருகே உள்ள பில்லம்மநாயக்கன்பட்டி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 44), பெயிண்டர். இவருடைய மனைவி சுசீலா (40). கூலிவேலை செய்கிறார். இவர்களுக்கு சுவேதா (20) என்ற மகளும், பிரகாஷ் (18) என்ற மகனும் உள்ளனர்.
சுவேதா திண்டுக்கல்லில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பிரகாஷ் பிளஸ்-2 மாணவர். இந்த நிலையில் நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுசீலா ஆகியோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர். சுவேதா கல்லூரி செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்தார்.
மின்சாரம் பாய்ந்து பலி
பின்னர் தனது ஆடையை எடுத்து அயர்ன் பாக்ஸ் மூலம் தேய்க்க முயன்றார். அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சுவேதா படுகாயமடைந்து அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சுவேதாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுவேதா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவி மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.