கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

பொன்னேரி அடுத்த நெற்குன்றம் ஊராட்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் கொசஸ்தலை ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-05-03 22:22 GMT

சோழவரம்,

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே நெற்குன்றம் ஊராட்சி செக்கஞ்சேரி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் விஷ்ணுகுமார் (வயது 20). மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விஷ்ணுகுமாருக்கு தேர்வுக்கு படிக்க கல்லூரியில் விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று மாலை தனது சக நண்பர்களுடன் கொசஸ்தலை ஆற்றிக்கு குளிக்க சென்றார்.

மூச்சுத்திணறல்

பின்னர் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு விஷ்ணுகுமார் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் திடீரென நீரில் மூழ்கினார். மூச்சுத்திணறிய விஷ்ணுகுமாரை மீட்க அவரது நண்பர்கள் கடுமையாக போராடினர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் விஷ்ணுகுமாரை மீட்ட நண்பர்கள் அவரை கரைக்கு இழுத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மூச்சுபேச்சு இல்லாமல் அசைவின்றி கிடந்த விஷ்ணுகுமாரை சிகிச்சைக்காக பஞ்செட்டி ஆரம்ப ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

பலி

அவரை பரிசோதித்த டாக்டர்கள் விஷ்ணுகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையறிந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துகொண்டு துடித்தனர். சோழவரம் போலீசார் விஷ்ணுகுமாரின் உடலை பெற்று பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி பொிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர் விஷ்ணுகுமார் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் செக்கஞ்சேரி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்