மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து கல்லூரி மாணவர் பலி
வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.;
ஆரணி
வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பிறந்த நாள் விழா
ஆரணி வி.ஏ.கே. நகரை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மகன் சங்கர் (வயது 19), செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் பி.காம் இறுதி ஆண்டு படித்து வந்தார். மேலும் ஆரணி புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் செய்யாறில் உள்ள நண்பனின் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக நண்பர் மணியுடன் சங்கர் மோட்டார் சைக்கிளில் செய்யாருக்கு நேற்று மாலை சென்றார். அங்கு பிறந்த நாள் விழா கொண்டாடிவிட்டு இரவு மணியும், சங்கரும் மோட்டார்சைக்கிளில் ஆரணிக்கு வந்து கொண்டிருந்தனர்.
தவறி விழுந்து சாவு
ஆரணி - செய்யாறு சாலையில் மாமண்டூர் காலனி அருகே வரும்போது சாலையில் உள்ள வேகத்தடையை கவனிக்காமல் மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்ததாக தெரிகிறது.
அப்போது வேகத்தடை ஏறி இறங்கும் போது மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த சங்கர் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மணி லேசான காயம் அடைந்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் தயாளன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.