கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை;

Update: 2022-06-29 13:35 GMT

சுல்தான்பேட்டை

ஆங்கில வழிக்கல்வி புரியாததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து. விவசாயி. இவரது மகள் பொன்மணி(வயது 20). இவர் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படித்து வந்த பொன்மணிக்கு, கல்லூரி படிப்பை ஆங்கில வழியில் சரிவர படிக்க முடியவில்லை. இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அதற்கு அவர்கள், செல்போன் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவது போன்று படிப்பிலும் ஆர்வம் காட்டினால் ஆங்கில வழிக்கல்வி புரியும் என்று அறிவுரைக்கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட பொன்மணி நேற்று இரவில் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது சகோதரர், பொன்மணி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்