அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தற்கொலை

காட்டுமன்னார்கோவில் அரசு விடுதியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-06 16:46 GMT

காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் மேலவீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ஜீவானந்தம் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஜீவானந்தம், வெளியே சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் ஜீவானந்தத்தை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் எந்தவொரு தகவலும் இல்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள அரசு மாணவர் விடுதியின் பின்புறம் உள்ள அறையில் இருந்த கம்பியில் ஜீவானந்தம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைபார்த்த கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜீவானந்தத்தின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து ஜீவானந்தத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய உடலுக்கு அருகில் கிடந்த செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜீவானந்தத்தின் தாய் இந்திராணி கொடுத்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜீவானந்தம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்