போலீஸ் என்று கூறி பணம் பறித்த கல்லூரி மாணவர் சிக்கினார்

ஆபாச படங்களை பார்ப்பவர்களை குறி வைத்து போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த கல்லூரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-26 19:15 GMT

ஆபாச படங்களை பார்ப்பவர்களை குறி வைத்து போலீஸ் என்று கூறி மிரட்டி பணம் பறித்த கல்லூரி வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


ஆபாச படங்கள்


கோவையில் செல்போன்களில் ஆபாச படம் பார்க்கும் நபர்க ளை குறி வைத்து மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அந்த வகையில் செல்ேபானில் ஆபாச படம் பார்க்கும் நபரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் சைபர் கிரைம் போலீஸ் என்று கூறி அறிமுகப் படுத்தி கொண்டார்.


பின்னர் அவர், நீங்கள் செல்போனில் ஆபாச படம் பார்ப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. நாங்கள் ஆய்வு செய்ததில் நீங்கள் ஆபாச படம் பார்த்தது உறுதியாகி உள்ளது. எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம் என்று கூறினார்.


பணம் பறிப்பு


அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர், தன் மீது வழக்கு எதுவும் பதிய வேண்டாம் என்று கெஞ்சினர். உடனே அந்த மர்ம நபர் வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.15 ஆயிரம், ஆவண செலவாக ரூ.340 என மொத்தம் ரூ.15,340 தர வேண்டும் என்று கேட்டார்.


அதை உண்மை என்று நம்பி, அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.15,340 செலுத்தினார். இதையடுத்து தன்னை ஏமாற்றி பணம் பறித்ததை அறிந்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


கல்லூரி மாணவர் கைது


இதில் சைபர் கிரைம் போலீஸ் போல் நடித்து பலரிடம் பணத்தை பறித்தது கோவை வடவள்ளியை சேர்ந்த 2-ம் ஆண்டு கல்லூரி மாணவர் மதன் (20) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


அவருக்கு உடந்தையாக 3 பேர் இருந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் விசாரணையில், செல்போனில் ஆபாச படம் பார்க்கும் நபர்களை குறி வைத்து போலீஸ் என்று கூறி வழக்கு பதிவு செய்து விடுவதாக மிரட்டி அந்த கும்பல் பலரிடம் பணம் பறித்ததும் தெரிய வந்தது.


மேலும் செய்திகள்