ஆமைகள் முட்டையிடும் இடங்களை ஆய்வு செய்ய மீன்வளக்கல்லூரியில் புதிய செயலி வெளியீடு
ஆமைகள் முட்டையிடும் இடங்களை பற்றி ஆய்வு செய்ய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்பட்டது.
ஆமைகள் முட்டையிடும் இடங்களை பற்றி ஆய்வு செய்ய தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்பட்டது.
உலக ஆமைகள் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 23-ந் தேதி 'அமெரிக்கா ஆமை மீட்பு' எனும் லாப நோக்கமற்ற அமைப்பானது உலக ஆமைகள் தினத்தை அனுசரித்து வருகிறது. கடல் மற்றும் நிலங்களில் வாழும் ஆமைகள் குறித்தும், அவற்றின் வாழ்விடங்களை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த ஆண்டு உலக ஆமைகள் தினத்தின் கருப்பொருள் 'நான் ஆமைகளை விரும்புகிறேன்' என்பதாகும்.
கடல் ஆமைகளின் வாழ்விடங்கள் குறைந்து வரும் நிலையில், இந்த உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உலக ஆமைகளின் தினம் வலியுறுத்துகிறது. இதையொட்டி தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மீன்வள உயிரியல் மற்றும் வளமேலாண்மைத் துறையால் உலக ஆமைகள் தினம்- 2023 நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப.அகிலன் தலைமை தாங்கி ஆமைகளின் முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையின் அவசியம் குறித்து விளக்கி பேசினார். முன்னாள் முதல்வரும், கவுரவ பேராசிரியருமான வை.கி.வெங்கடரமணி சமூகம் சார்ந்த ஆமை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார்.
புதிய செயலி
மீன் வளஉயிரியல் மற்றும் வளமேலாண்மை துறையின் உதவிப்பேராசிரியர் ச.சுதன், தென் தமிழகத்தில் இருக்கும் ஏற்கனவே அறியப்பட்ட மற்றும் புதிதாக கண்டெறியப்பட்ட ஆமைகள் முட்டையிடும் இடங்களை பற்றி ஆய்வு செய்ய புதிதாக உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலியை பற்றி விளக்கினார். இந்த செயலி மற்றும் இணைய வலைபதிவை மீன்வளக் கல்லூரி முதல்வர் அகிலன் வெளியிட்டார். இந்த செயலியை உருவாக்க உதவிய மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவிகளான ஐ.கீர்த்தனா மற்றும் வி.பிரியங்கா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணவர்கள், பேராசிரியர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் உதவிப் பேராசிரியர் ரா.துரைராஜா நன்றி கூறினார்.