திருச்சியில் கல்லூரி பஸ்-பள்ளி வேன் நேருக்கு நேர் மோதல் - 3 வாகனங்கள் சேதம்

திருச்சியில் கல்லூரி பஸ், பள்ளி வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Update: 2022-08-26 12:44 GMT

திருச்சி:

திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பஸ் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை கண்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

அந்த பஸ் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் இரயில்வே மேம்பாலத்தில் ஏறி, இறங்கும்போது அதன்வேகம் அதிகமாக இருந்துள்ளது. வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றின் மீது மோதியதுடன் நில்லாமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீதும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மற்றும் லால்குடி எசனக்கோரை பகுதியை சேர்ந்த பள்ளி வேன் டிரைவர் மணிகண்டன் (வயது 46) என்பவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்துக்கு உள்ளானவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி வேன் டிரைவர் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்