அனைத்து ஊராட்சிகளிலும் பண்ணைக்குட்டைகள் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து ஊராட்சிகளிலும் பண்ணைக்குட்டைகள் அதிகளவில் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

Update: 2022-08-15 18:27 GMT

திருவண்ணாமலை

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அனைத்து ஊராட்சிகளிலும் பண்ணைக்குட்டைகள் அதிகளவில் அமைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசினார்.

சிறப்பு கிராம சபை கூட்டம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை ஒன்றியம் தென்மாத்தூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று முதல் - அமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களே தேசிய கொடியினை ஏற்றி சிறப்பித்து உள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டம் 860 கிராம பஞ்சாயத்துக்களை கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக மாவட்டம் உள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2 மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்தாத நிலங்களை ஒருங்கிணைத்து விவசாயம் செய்திட பயிர்கடன், உரக்கடன் பெறலாம்.

மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் மயானங்கள், சுற்றுச்சுவர் அமைக்கவும், பக்ககால்வாய் அமைக்கவும், பண்ணைக்குட்டைகள் அமைக்கவும் அரசாங்கம் அதிக அளவில் மானியங்களை கொடுத்து வருகிறது.

பண்ணைகுட்டைகள்

நமது மாவட்டத்திற்கு எண்ணற்ற புதிய திட்டங்கள் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறப்பான முறையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து விரைவாக திட்டப்பணிகளை முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வடைய ஏற்கனவே பண்ணைக்குட்டைகள் அமைத்து மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளோம்.அதே போல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மேலும் பண்ணைக்குட்டைகளை அதிகளவில் அமைத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அத்திவாசிய தேவைகளான வீட்டுமனைப் பட்டா, தனிநபர் வீடு, கழிவறை, குடிநீர் தேவை, மின்சார வசதிகள், சாலை வசதிகள் போன்ற அத்தியவாசிய தேவைகள் குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரண்யாதேவி, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியம்மாள், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.அனைத்து ஊராட்சிகளிலும் பண்ணைக்குட்டைகள் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சுஅனைத்து ஊராட்சிகளிலும் பண்ணைக்குட்டைகள் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்