கலெக்டர்களுக்கு அதிக பணிச்சுமை:குண்டர் சட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கையெழுத்திடுவதை செயல்படுத்த 4 வார கெடு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

குண்டர் சட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கையெழுத்திடுவதை செயல்படுத்த 4 வார அவகாசம் விதித்து, தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-06-28 21:02 GMT


குண்டர் சட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் கையெழுத்திடுவதை செயல்படுத்த 4 வார அவகாசம் விதித்து, தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குண்டர் சட்ட அதிகாரம்

திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் தமிழழகன். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் மகன் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் குண்டர் சட்ட நடவடிக்கைக்கு கையெழுத்திடுவதால், மாவட்ட கலெக்டர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. எனவே, இந்த அதிகாரத்தை ஐ.ஜி. அல்லது போலீஸ் கமிஷனர்களுக்கு வழங்கும் வகையில் தேவையான சட்டத் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதா? என்பது குறித்து அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

சட்ட திருத்தத்துக்கு அவகாசம்

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது உள்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1982-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு சட்டம் 14-ன் பிரிவு 3 (2) -ல் திருத்தம் செய்வது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டின் பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. இது சம்பந்தமாக முடிவு எடுப்பதற்கு 4 வார கால அவகாசம் வேண்டும் என பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் அரசு தரப்புக்கு, 4 வாரகால அவகாசம் வழங்கப்படுகிறது. எனவே இதில் தேவையான திருத்தங்களை செய்து செயல்படுத்துவது குறித்த அறிக்கையை இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்