கலெக்டர் அலுவலகத்தைமீன் வியாபாரிகள் முற்றுகை
தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை மீன் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்;
விழுப்புரம்
தற்காலிக மீன் மார்க்கெட்
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானத்தில் தற்காலிகமாக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவில் புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதனால் அங்கு தற்காலிகமாக இயங்கி வரும் மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும்படி நகராட்சி நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி புதிய பஸ் நிலையம் அருகில் தற்காலிகமாக இயங்கி வரும் மீன் மார்க்கெட் மார்ச் 7-ந் தேதி முதல் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அறிஞர் அண்ணா மீன் மார்க்கெட்டில் இயங்கும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதையொட்டி மீன் மார்க்கெட் சுத்தம் செய்யப்பட்டது. அதுபோல் அங்கு மீன் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர், மின்விளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
இந்நிலையில் நேற்று காலை புதிய பஸ் நிலைய நகராட்சி மைதானத்தில் செயல்படும் தற்காலிக மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வரும் மொத்த மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள், எம்.ஜி.சாலை அண்ணா மார்க்கெட்டுக்கு செல்ல மறுத்து புதிய பஸ் நிலைய நகராட்சி மைதானத்திலேயே தொடர்ந்து மீன் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு அவர்கள், மாவட்ட கலெக்டர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நிரந்தர இடம் வேண்டும்
நாங்கள் தற்போது மீன் வியாபாரம் செய்து வரும் புதிய பஸ் நிலைய நகராட்சி மைதானமே சவுகரியமாக உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டை நம்பி 2,500 குடும்பங்கள் உள்ளன. மீன் வியாபாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் விழுப்புரம் உள்ளது. தற்போது இயங்கி வரும் தற்காலிக மீன் மார்க்கெட் அமைந்துள்ள பகுதியிலேயே காய்கறி மார்க்கெட்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இடவசதி உள்ளது. எனவே அங்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தரமான இடம் ஒதுக்க வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு மீன் வியாபாரிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.