கலெக்டர் அலுவலகத்தை நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
சரியான முறையில் ஊதியம் வழங்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தை விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வதற்காக துப்புரவு பணியாளர்கள் 440 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 121 பேர் நிரந்தர பணியாளர்கள் ஆவர். மற்ற 319 பேரும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோல் ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு சரியானமுறையில் ஊதியம் வழங்கக்கோரியும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்வதை நிறுத்தக்கோரியும் நேற்று காலை 8 மணியளவில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக நுழைவுவாயில் முன்பு திடீரென திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்காததை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் அங்குள்ள நுழைவுவாயில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார், நகராட்சி கமிஷனர் சுரேந்திரஷா ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பிறகு துப்புரவு பணியாளர்கள் அனைவரும் காலை 10.30 மணியளவில் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.