குழந்தைகள் காப்பகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ராணிப்பேட்டையில் குழந்தைகள் இல்லத்தில் கலெக்டர் வளர்மதி திடீரென சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2023-04-14 18:39 GMT

கலெக்டர் திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று ராணிப்பேட்டை காரை அரசினர் சிறுவர்களுக்கான குழந்தைகள் இல்லத்தில் விடுமுறை நாட்களில் பணியாளர்கள் முறையாக பணியில் உள்ளனரா? என்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து அவர்களிடம் படிப்புகள் குறித்து கேட்டறிந்து உரையாடினார். தற்போது நிலவும் அதிகமான கோடை வெயிலில் வெளியில் சென்று நீண்ட நேரம் விளையாட வேண்டாம் என தெரிவித்தார்.

அடிப்படை வசதிகள்

மேலும் தற்போது நடைபெற்றுவரும் தேர்வுக்கு அனைவரும் நல்ல முறையில் தயார் செய்து நல்லபடியாக தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். மேலும் இல்லத்தில் உங்களுக்கான அடிப்படை வசதிகள், உணவு மற்றும் பிற வசதிகள் சரியாக உள்ளதா? என கேட்டதற்கு எவ்வித பிரச்சனைகளும் இல்லை என குழந்தைகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மாணவர்கள் தங்கும் அறையையும், சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, சிறுவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவ அலுவலரிடம் குழந்தைகளுக்கு முறையான உடற் பரிசோதனைகள் செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார். அனைவருக்கும் கண் மற்றும் இதர பரிசோதனைகள் முறையாக செய்யப்படுகிறது. ஒரே ஒரு சிறுவருக்கு மட்டும் சர்க்கரை நோய் பிரச்சினை உள்ளது. அவருக்கு அரசு மூலம் மருந்து மற்றும் மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உடல் நலன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்றபடி அனைத்து சிறுவர்களும் நலமுடன் உள்ளனர் என இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆய்வின்போது சிறுவர் இல்ல மருத்துவ அலுவலர் உதயகுமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்