வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.;

Update: 2023-07-04 18:42 GMT

நகராட்சி

பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் பெறப்படும் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்வது மற்றும் உலர் கழிவுகளை தனியாக பிரித்து எடுத்து மறு சுழற்சியாளர்களிடம் வழங்குவது, மக்கும் குப்பைகளை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவது குறித்து நகராட்சி அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வாங்கவும், பேரணாம்பட்டு - ஆம்பூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும்மாறு ஆணையாளருக்கு உத்தரவிட்டார். பின்னர் ஆயக்கார வீதியில் அமைந்துள்ள இந்துக்கள் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் கானாற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுந்தடைந்துள்ளதையும், சுடுகாட்டிற்கு சுற்று சுவர் அமைப்பது குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டார்.

நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல், ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், நகர மன்ற துணைத்தலைவர் ஆலியார்ஜூ பேர் அஹம்மத், தாசில்தார் நெடுமாறன், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி, ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், நகர மன்ற கவுன்சிலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒன்றியம்

முன்னதாக பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் மேல்பட்டி ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சி.எப்.எஸ்.ஐ.டி.எஸ். திட்டத்தில் கட்டப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிடத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பல்லலகுப்பம் ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட இருந்த சத்துணவை ருசித்து பார்த்து சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

பின்னர் பல்லலகுப்பம் கிராமத்திலிருந்து பொகளூர் கிராமம் செல்லும் தார்சாலை பழுதடைந்துள்ளதை மறு சீரமைப்பது குறித்தும், திடக்கழிவுகள் கொட்டப்பட்டு வரும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு கொட்டப்பட்டுள்ள திடக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எஸ்.சி.பி.ஏ.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பேரணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, தாசில்தார் நெடுமாறன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்