புகழூர் சர்க்கரை ஆலையில் கலெக்டர் திடீர் ஆய்வு

புகழூர் சர்க்கரை ஆலையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-05 19:06 GMT

புகழூரில் தனியார் சர்க்கரை ஆலை ஒன்று ெசயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் நுண் கரித்துகள்களாலும், கழிவுநீராலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுதாக புகார் வந்தது. அதன்பேரில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையிலான அதிகாரிகள் புகார் கூறப்பட்ட வேலாயுதம்பாளையம், செம்படாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு வளாகங்களில் நுண்கரிதுகள்கள் படிந்திருப்பதை ஆய்வு செய்தார். தொடர்ச்சியாக சர்க்கரை ஆலை வளாகத்தில் கொதிகலன் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தபோது, கொதிகலன் எரிபொருளாக கரும்புசக்கையுடன் நிலக்கரியும் கலந்து பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மிகவும் பழமையானதாக உள்ளதும், அதன் உறுப்பு இயக்க பகுதிகள் அனைத்தும் சீராய்வு செய்ய கூடியதாகவும் கண்டறியப்பட்டது. இதற்கு சர்க்கரை ஆலையின் அதிகாரிகள் தற்போதைய கரும்பு அரவை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால் இம்மாதம் இறுதியில் கரும்பு அரவை முடிவடைவதாகவும் தெரிவித்தனர்.

அப்போது, சர்க்கரை ஆலை நிர்வாகம் தங்கள் வளாகத்தில் உள்ள கொதிகலனுக்கு நிலக்கரியை மட்டுமே எரிபொருளாக பயன்படுத்துமாறும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஒட்டு மொத்த உபகரணங்களையும், அதன் இயக்கம் சார்ந்த முழுமையான தணிக்கை தயாரிக்கப்பட்டு அதனை சமர்ப்பிக்குமாறும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் தொடர்ந்து நிலக்கரியை மட்டும் கொதிகலனுக்கு எரிபொருளாக பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும், ஆலை நிர்வாகம் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தனியார் சர்க்கரை ஆலை பொது மேலாளர் மற்றும் அதிகாரிகளிடம் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலெட்சுமி, புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், ஆணையர் கனிராஜ், புகழூர் தாசில்தார் முருகன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள், நகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்