செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு - கலெக்டர் தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-09-17 12:39 GMT

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகர் நகராட்சியில் உள்ள மறைமலைநகர், வல்லாஞ்சேரி, பொத்தேரி விரிவு பகுதி, தைலாவரம், கீழக்கரணை, சட்டமங்கலம், பேரமனூர் மற்றும் பேரமனூர் விரிவு போன்ற கிராமங்களில் உள்ள 8 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் 969 பேருக்கு மறைமலைநகர் திருவள்ளுவர் சாலை மற்றும் பேரமனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.23 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தில் இருந்து தினந்தோறும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழா நேற்று மறைமலைநகர் திருவள்ளுவர் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை தாங்கி புதிதாக அமைக்கப்பட்ட சமையல் கூடத்தை திறந்து வைத்து அங்கு மாணவர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்யப்பட்டிருந்த ரவை, காய்கறி கிச்சடி மற்றும் இனிப்பு வகை போன்றவற்றை சாப்பிட்டு பார்த்து உணவு தரத்தை சோதித்தார்.

இதனை தொடர்ந்து மறைமலைநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறி காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மறைமலைநகர் நகரமன்ற தலைவர் சண்முகம், நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா கருணாகரன், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் சசிகலா, மண்டல பொறியாளர் கருப்பையா ராஜா, மறைமலைநகர் நகராட்சி ஆணையாளர் லட்சுமி, நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி நெல்லிக்குப்பம் சாலையில் அமைந்துள்ள காமராஜபுரம் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி தொடக்கப்பள்ளி மற்றும் நந்திவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், மாணவ, மாணவிகளுக்கு சிற்றுண்டி உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். நகர மன்ற துணைத்தலைவர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 2 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

காஞ்சீபுரம் பட்டாள மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

இதில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சீபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், மாவட்ட ஒன்றிய குழுத்துணைத்தலைவர் நித்தியா சுகுமார், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்