வேலை தரும் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்; திண்டுக்கல் கலெக்டர் விசாகன் பேச்சு
வேலை தரும் படிப்புகளில் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று திண்டுக்கல் கலெக்டர் விசாகன் பேசினார்.;
மதுரை பத்மராஜம் கல்வி குழுமம், திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலகம் சார்பில் வணிகவியல் துறை மேற்படிப்பு தொடர்பாக வணிகத்துறை ஆசிரியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி திண்டுக்கல்லில் இன்று நடைபெற்றது. இதில் பத்மராஜம் கல்வி குழுமத்தின் பேராசிரியர் அக்பர் பாட்ஷா வரவேற்று பேசினார். திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது கலெக்டர் பேசுகையில், சமுதாயத்துக்கு தகுதியான மனிதனை உருவாக்குவதே ஆசிரியரின் தலையாய பணி ஆகும். மாணவர்களை பன்முக தன்மை கொண்டவர்களாக உருவாக்க வேண்டும். நல்ல ஆசிரியர்களாக சிறந்த மனிதனை உருவாக்க முடியும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் படிப்புகள் குறித்து ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். தற்போது வணிகவியல் துறையில் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. வருமான வரி தாக்கல் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு ஆடிட்டரின் உதவி தேவைப்படுகிறது. எனவே சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ். படித்தால் நல்ல வேலைவாய்ப்பு இருக்கிறது. அதோடு சுயமாகவும் வேலை செய்யலாம். எனவே அந்த படிப்புகளை படிக்க மாணவ-மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும், என்றார்.
மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ராகவன் வாழ்த்தி பேசினார். பத்மராஜம் கல்வி குழுமத்தின் சேர்மன் பாலன் வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் சி.ஏ., சி.எம்.ஏ., சி.எஸ். ஆகிய படிப்புகளில் இருக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து ஆடிட்டர் தவமணி விரிவாக பேசினார். அதேபோல் ஏ.சி.சி.ஏ. படிப்பு குறித்து ஏ.சி.சி.ஏ. தென்இந்திய தலைவர் சரவணகுமார் பேசினார். இதில் ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி அப்துல்ஜபார், ஏராளமான வணிகவியல் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் புலவர் வை.சங்கரலிங்கனார் நன்றி கூறினார்.