பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-11 13:01 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிக்கூட வாகனங்களை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

பள்ளிக்கூட வாகனங்கள் ஆய்வு

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை (திங்கட்கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யுமாறு போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி நேற்று தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்திற்கு வரவழைக்கப்பட்ட பள்ளி வாகனங்களை நேற்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் பள்ளி வாகனங்களின் படிக்கட்டு, வாகனத்தின் இருக்கைகள், அவசரகால வழி, முதலுதவி மருந்துகள், தீயணைப்பு கருவி ஆகியவை சரியான முறையில் உள்ளதா என்றும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி மற்றும் கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி பேருந்து ஓட்டுனர்களுக்கு பாதுகாப்பாக பேருந்துகளை இயக்குவது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அறிவுரை வழங்கினார்.

ஆட்டோக்களும் ஆய்வு செய்யப்படும்

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 133 வாகனங்களும், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 137 வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களும் ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் தாசில்தார் சுசிலா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன், வட்டார ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத் கொண்ட குழுவினர் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளி வாகனங்களில் இருக்க வேண்டியவை என நீதிமன்றம் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்டுள்ளது. அவை பள்ளி வாகனங்களில் இருக்கிறதா என குழுவினர் ஆய்வு செய்தனர். இதுதவிர வாகன ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

14 வாகனங்களில் குறைகள் கண்டுபிடிப்பு

கோவில்பட்டி பகுதியில் 80 பள்ளிகளில் 279 வாகனங்கள் உள்ளன. இதில் நேற்று 137 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 14 வாகனங்களில் குறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குறைகளை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மீதமுள்ள பள்ளி வாகனங்களின் ஆய்வு, மற்றொரு நாளில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்