டீக்கடைகளில் வாழை இலை வழங்கி கலெக்டர் செந்தில்ராஜ் விழிப்புணர்வு

தூத்துக்குடியில் உணவு பண்டங்களை அச்சிட தாள்களில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, டீக்கடைகளில் வாழை இலை வழங்கி கலெக்டர் செந்தில்ராஜ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Update: 2022-07-29 11:46 GMT

தூத்துக்குடியில் அச்சிட்ட தாள்களில் உணவு பண்டம் வழங்க தடை விதிக்கப்பட்டு இருப்பதை முன்னிட்டு டீக்கடைகளில் வாழை இலை வழங்கி விழிப்புணர்வு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் அச்சிட்ட தாள்களில் வடை, பஜ்ஜி உள்ளிட்ட உணவு பண்டங்களை வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அச்சிடப்படாத தாள், வாழை இலைகளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று காலை தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள டீக்கடைகளில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து டீக்கடைகளில் உணவு பண்டங்கள் வழங்குவதற்கு வாழை இலைகளை பயன்படுத்துமாறு கூறி வாழை இலையையும் வழங்கினார்.

உடல் பாதிப்பு

இது குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறும் போது, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை உணவு வணிக நிறுவனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடைக் கடைகள், தேநீர் கடைகள், உணவகங்கள், பேக்கரிகள், இனிப்பகங்கள் உள்ளிட்ட கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா, முட்டைகோஸ், பப்ஸ், ஸ்வீட்ஸ் மற்றும் இதர கார வகைகளை பொதுமக்களுக்கு அச்சிட்ட தாள்களில் பரிமாறுவதும், பார்சல் கட்டுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

வாழை இலை-பனைஓலை

வணிகர்களின் இது போன்ற பாதுகாப்பற்ற வணிகப் பழக்க வழக்கங்கள், பொதுமக்களின் நலனுக்கு ஊறுவிளைவிப்பது ஆகும். அச்சிட்ட தாள்களை பயன்படுத்தும் போது, அதில் உள்ள காரியம் பல்வேறு உடல் பாதிப்பை உருவாக்குகிறது. எனவே பொதுமக்களின் பொது சுகாதார நலனை கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் ஆகும். ஆகையால் அச்சிட்ட தாளுக் கு பதிலாக வாழை இலை, பனை ஓலை ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

ஆய்வின் போது, மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்