பழுதடைந்த 77 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த 77 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழுதடைந்த 77 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
பழுதடைந்த கட்டிடங்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து இருப்பதை கண்டறிந்து அவற்றினை இடிக்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களை ஆய்வு செய்து, அறிக்கையை அளிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 170 பள்ளி கட்டிடங்கள் நீண்ட நாட்கள் ஆகிவிட்டதும், பழுதடைந்து உள்ளதும் கணக்கெடுக்கப்பட்டது.
அவற்றில் முதற்கட்டமாக 77 பள்ளி கட்டிடங்களை இடிக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். அதில் 39 பள்ளி கட்டிடங்கள் இதுவரை இடிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
தற்போது 38 பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் 2 நாட்களில் முடிவு பெறும், எஞ்சி உள்ள 93 பள்ளி கட்டிடங்கள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இடிக்க உத்தரவு வழங்கப்பட்டு, பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
வாலாஜா ஒன்றியம், மணியம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டு வருவதை கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும் பள்ளி வளாகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்டிடத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்கு குழாய் இணைப்பு இணைக்கப்படாமல் இருந்ததை பார்த்து, உடனடியாக குழாய் இணைக்கவும், பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் கழிவுகளை அகற்றிடவும், தண்ணீர் டேங்க் குழாய் தனியாக இருப்பதை அகற்றிடவும் உத்தரவிட்டார்.
மேலும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் மேற்கூரைகள் சமதளமில்லாமல் மழைநீர் தேங்காமல் இருக்க, சிறிய அளவில் சாய் தளமுடன் அமைக்க வேண்டும்.
பல கட்டிடங்களில் தண்ணீர் தேங்கி மேற்கூரைகள் பழுதடைகின்றது. ஆகவே பொறியாளர்கள் கட்டிடங்களில் மழைநீர் தேங்காவண்ணம் சிறிய அளவில் சாய் தளத்துடன் மேற்கூரை அமைக்கும் வண்ணம் திட்ட அறிக்கை தயார் செய்து இனிவரும் காலங்களில் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
பேச்சுத்திறன்
அவரைக்கரை தொடக்கப் பள்ளியில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளில் ஆய்வு செய்த கலெக்டர், மாணவ மாணவிகளின் ஆங்கில பேச்சுத் திறனை பரிசோதித்து மாணவ-மாணவிகள் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கில பாடத்தினை கற்றுக் கொடுக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு வார்த்தையையும் தனித்தனியாக படிக்கின்றனர். அதற்கான அர்த்தமும் புரியவில்லை என தெரிகிறது.
ஆகவே மாணவ மாணவிகளுக்கு புரியும் வண்ணம் ஆங்கில வார்த்தையின் அர்த்தங்களை கற்றுக் கொடுக்க ஆசிரியர்களை கலெக்டர் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.