மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் உத்தரவு

மாடுகளை சாலையில் அவிழ்த்துவிடும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-08-10 17:40 GMT

ஆலோசனை கூட்டம்

வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப்பணிகள், குடிநீர் பணிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சுஜாதா முன்னிலை வகித்தார். கமிஷனர் ரத்தினசாமி வரவேற்றார்.

கூட்டத்தில், குடிநீர் பணிகள் நடைபெற்று வரும் வ.உ.சி.நகர், சென்னை- காட்பாடி சாலை, கழிஞ்சூர், பாரதிநகர், காந்திநகர் மேற்கு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் பணிகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்து பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து 4 மண்டலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வினியோக பணிகள், புதிய மோட்டார் இணைப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் 15-வது மத்திய நிதிக்குழு, மாநில நிதிக்குழு, அம்ருத் திட்டம், ஸ்மார்ட்சிட்டி திட்டம், பொதுநிதி ஆகிய நிதி ஆதாரங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

இன்னும் ஓரிரு மாதங்களில் பருவமழை தொடங்க உள்ள நிலையில் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். மேலும் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க வேண்டும். மீண்டும் மாடுகளை சாலையில் அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்