குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை-அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

Update: 2022-10-10 18:45 GMT

தர்மபுரி:

குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தர்மபுரி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, உபகரணங்கள் கேட்டும் மொத்தம் 446 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

நிவாரண நிதி

கூட்டத்தில் பாப்பிநாயக்கனஅள்ளி சிறுபிள்ளை கிராமத்தை சேர்ந்த முருகன்-பூங்கொடி தம்பதியினரின், இனியா மற்றும் சிவானி ஆகிய 2 குழந்தைகள் எதிர்பாராதவிதமாக ஓடை குட்டையில் மூழ்கி உயிரிழந்ததையொட்டி, 2 குழந்தைகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை குழந்தைகளின் தாயார் பூங்கொடியிடம் கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் உஷாராணி உள்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்