ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வானவில் மன்றம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-28 22:44 GMT

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் வானவில் மன்றத்தை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

வானவில் மன்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் "வானவில் மன்றம்" நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களிலும் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வண்ண பலூன்களை பறக்கவிட்டு வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். மேலும், மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார். இந்த வானவில் மன்றம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்குரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், செயல்விளக்கம் செய்து காண்பிப்பது, மாணவர்களுக்கு கேள்விகள் கேட்கும் திறனை ஊக்கப்படுத்துவது உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சி பள்ளி

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமை தாங்கி வண்ண பலூன்களை பறக்க விட்டு வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார். விழாவில் ஆசிரியை மல்லிகா கலந்துகொண்டு எளிய அறிவியல் பரிசோதனைகள், கணித செயல்பாடுகள், பொறியியல் தொழில்நுட்ப செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியை லதா நன்றி கூறினார்.

இதேபோல் ஈரோடு திருநகர் காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்திலும் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களிலும் வானவில் மன்றம் தொடங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்