அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை
அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுருக்குமடி வலைக்கு தடை
தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அரசாணையின்படி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பதை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத்துறை மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சில மீனவ கிராமத்தினர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபடப்போவதாக அறிய வருகிறது. மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர் நடவடிக்கைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினை பயன்படுத்தவுள்ள மீனவ கிராமத்தினர் மற்றும் சுருக்குமடி மீன்பிடி படகு உரிமையாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே சுருக்குமடி வலையினை கொண்டு மீன்பிடித்தொழில் செய்ய வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், சிறுதொழில் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை நிலைப்படுத்திடவும், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான கடல் வளத்தை பேணி பாதுகாப்பதற்கும் ஒட்டுமொத்த மீனவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்படும் சுருக்குமடி தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்து விழுப்புரம் மாவட்ட கடல் பகுதியிலும், மீனவ கிராம பகுதிகளிலும் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் அரசால் அனுமதிக்கப்பட்ட சுமூகமான மீன்பிடிப்பு முறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் விழுப்புரம் மாவட்ட கடல் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்த முயன்றாலோ அல்லது பயன்படுத்தினாலோ உடனடியாக தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின்படி படகுகள் மற்றும் வலைகள் பறிமுதல் செய்யப்படும். மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையினைக்கொண்டு பிடிக்கப்பட்ட மீன்களை கொள்முதல் செய்யும் மீன் விற்பனையாளர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மீன்வளத்துறை மூலம் பெறப்படும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மேற்கண்ட தகவல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.